Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் 1948-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டு அன்றைய மேதகு சென்னை ஆளுநர் திரு. ஸ்ரீ பிரகாசா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1957-ஆம் ஆண்டு அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் திரு. கு. காமராஜ் அவர்களால் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சாலை, பாலப்பணிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மீதான சோதனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும், சாலை மற்றும் பாலப்பணிகளில் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொள்வதும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய பணிகளாகும். நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு தேவைப்படும் போது தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது. நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் இயக்குநர் அவர்களின் தலைமையில் 2 இணை இயக்குநர்கள், 1 கண்காணிப்புப் பொறியாளர், 6 துணை இயக்குநர்கள் மற்றும் 17 கோட்டப் பொறியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம்

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையான நோக்கங்கள்,

  • ஆராய்ச்சி, சோதனைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு
  • சாலை பாதுகாப்பு .
  • பயிற்சி .

ஆகியவை ஆகும்.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள்:

  • புதிய கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.
  • சாலை மற்றும் பாலப்பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதான பரிசோதனைகளை மேற்கொள்வது. .
  • சாலைப் பணிகளின் போது அறியப்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.
  • நெடுஞ்சாலைத் துறையினால் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரத்தினை உறுதி செய்தல்.
  • நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சிகளின் மூலம் திறன் மேம்பாடு செய்தல்.
  • பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தினை உறுதி செய்வதற்கு சாலை பாதுகாப்பு முறைகளை அமல்படுத்த கள பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • சாலை வடிவமைப்பு மற்றும் சாலை சந்திப்பை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குதல்.

I. நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள்:

1. நடைமுறை பணிகள்:

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் மண், கற்கலவை, நிலக்கீல், போக்குவரத்து ஆகிய ஆய்வகங்கள் சென்னையில் மிக நவீன கருவிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய எட்டு இடங்களில் மண்டல ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திற்குரிய வழக்கமான பணிகளான மண் மற்றும் பாறை மாதிரிகளை சோதனை செய்வது, பாலங்களுக்கான ஆழ்துளைத் தூண்களின் தாங்குதிறனை சோதனை செய்வது, கற்கலவை பணிகளைச் சேதமில்லா சோதனை முறையின் மூலம் சோதனை செய்வது, சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகளை சோதனை செய்வது, நெகிழும் மற்றும் நெகிழாத சாலைக் கட்டுமானங்களை வடிவமைப்பது, கற்கலவை, நிலக்கீல் கலவைகளை வடிவமைப்பது, சாலை மேற்பரப்பில் ஓடுதளத்தில் கடினத்தன்மை சோதனை நடத்துவது, சாலைக் கட்டுமானத்தின் உறுதியை ‘பெங்கில்மென்பீம் டிஃப்லெஷன்’ சோதனை (BBD) மூலம் கண்டறிவது, போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வாகன சேதக் காரணி (VDF) ஆகியவற்றை அச்சு சுமையேற்ற மதிப்பாய்வு என்னும் சோதனையின் மூலம் கண்டறிந்து, அதன் அடிப்படையில் சாலைக் கட்டுமானத்தை வடிவமைப்பது மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துவது ஆகிய பணிகள் இந்த ஆய்வகங்களில் நடைபெற்று வருகின்றன.

II. 2. ஆய்வக பணிகள்:

2.1. நொறுக்கப்பட்ட கல்மணல்-(M-Sand):

ஆற்று மணலுக்கு மாற்றாக நொறுக்கப்பட்ட கல் மணல், 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த வட்டங்களின் கண்காணிப்புப்பொறியாளர்கள் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் கோட்டப்பொறியாளர் தரக்கட்டுப்பாடு ஆகியோர் நொறுக்கப்பட்ட கல் மணல் தயாரிக்கப்படும் இடங்களை நேரில் ஆய்வு செய்து அதன் தரத்தினை உறுதி செய்த பிறகே நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பணிகளில் இம்மணல் பயன்படுத்தப்படுகிறது.
வெர்டிகல் ஷாப்ட் இம்பேக்ட் (VSI) கிரஷர் முறையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு சதவீத 75 மைக்ரான் துகள்களையுடைய நொறுக்கப்பட்ட கல் மணல் மாதிரிகளைக் கொண்டு, விரிவான ஆய்வு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், ஆற்று மணலை கற்கலவையில் பயன்படுத்தி அடையப்படும் 28 நாட்கள் அழுத்த தாங்கு திறனைவிட நொறுக்கப்பட்ட கல் மணலை பயன்படுத்தி அதிக தாங்கு திறன் பெறப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட கான்கிரீட் கலவை வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

HRS

நொறுக்கப்பட்ட கல்மணலை பயன்படுத்தி வலுப்படுத்திய கற்கலவை உத்திரத்தை சோதனை செய்தல்

HRS

நொறுக்கப்பட்ட கல்மணலை பயன்படுத்தி வலுப்படுத்திய கற்கலவை பலகையை சோதனை செய்தல்


2.2.பழுதடைந்த பாலங்களை புதுப்பிக்க செய்வதற்கான தீர்வு நடவடிக்கைகள்:

2018ஆம் ஆண்டில் பழுதடைந்த மற்றும் புதுப்பிக்கும் நிலையிலுள்ள பின்வரும் பழைய பாலங்களை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் குழு ஆய்வு செய்தது.

  • திண்டிவனம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை-45 இன் கி.மீ 123/2இல் உள்ள சாலை மேம்பாலம் - விழுப்புரம் (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம்.
  • பெண்ணையாற்று பாலம் அணுகு சாலையில் (SHU-47)கி.மீ 0/2ல் உள்ள பாலம் கள்ளக்குறிச்சி(நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம்.
  • காவிரி ஆற்றின் குறுக்கே முசிறி - குளித்தலை – பட்டுக்கோட்டை – ஆலங்குடி – பேராவூரணி – சேது பாவாசமுத்திர சாலையில் (SHU-71) கி.மீ 0/385 – 1/850 தந்தை பெரியார் பாலம் - கரூர் (நெ), கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம்.

2019 ஆம் ஆண்டில் பழுதடைந்த மற்றும் புதுப்பிக்கும் நிலையிலுள்ள பின்வரும் பழைய பாலத்தை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் குழு ஆய்வு செய்தது

  • மதுரை(நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் உள்ள வாரணாசி-கன்னியாகுமரி சாலையில் (கைவிடப்பட்ட NH-71) (SHU-73) கிமீ 443/8-442/2 இல் உள்ள மேயர் முத்து பாலம்.

2022 ஆம் ஆண்டில் பழுதடைந்த மற்றும் புதுப்பிக்கும் நிலையிலுள்ள பின்வரும் பழைய பாலங்களை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் குழு ஆய்வு செய்தது.

  • மல்லியக்கரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் (SH- 79) கி.மீ 94/200 - 94/660 (பள்ளிபாளையம் காவிரி பாலம்)

HRS
HRS

பாலங்களின் பயன்பாட்டு காலம் மற்றும் உறுதியை மேம்படுத்துவதற்காக விரிசல்களுக்கு முத்திரையிடுதல், guniting / ஷாட்கிரீட்டிங், தாங்கும் திசைக்கூறு விரிவாக்க இணைப்பு ஆகியவற்றை மாற்றுவது எக்ஸ்பேன்ஷன் ஜாய்ன்டுகளை மாற்றுவது, தள மேற்பரப்புகளை பழுது நீக்குவது, ஆற்றுப் படுகைகளின் பாதுகாப்பு மற்றும் ஆற்றுக் கரைகளை உறுதிப்படுத்துதல் போன்ற பொருத்தமான தீர்வு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன.

2.3 சாலைகளுக்கான கடினத் தன்மை சோதனை:

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட அலகின் செயல்திறன் வெளிப்பாட்டின் அடிப்படையிலான சாலை பராமரிப்பு ஒப்பந்தத்தில் உள்ள சாலைகளுக்கு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பொறியாளர்கள் முன்னிலையில் போக்குவரத்தின் இரு திசைகளிலும் கடினத்தன்மை சோதனை (Roughness Test) நடத்தப்படுகிறது. சமீபத்தில், நாகப்பட்டினம் - தூத்துக்குடி சாலையில் கி.மீ 10/2 முதல் 102/0 வரை சாலை மேற்பரப்பின் கடினத் தன்மை சோதனை (Roughness Test) நடத்தப்பட்டது.

HRS HRS
HRS

கடினத்தன்மை சோதனை – நாகப்பட்டினம் - தூத்துக்குடி சாலையில் கி.மீ10/2-102/0


சமீபத்தில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்தின் கோரிக்கையின் பேரில், இப்பிரிவால் பராமரிக்கப்படும் சென்னை வெளிவட்ட சாலையில் 60.15 கிமீ நீளத்திற்கு கடினத்தன்மை சோதனை நடத்தப்பட்டது.

HRS HRS
சென்னை வெளிவட்ட சாலையில் மேற்பரப்பின் கடினத்தன்மையை கண்டறிய நடத்தப்பட்ட சோதனை

3. ஆலோசனைப் பணிகள்

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் வழக்கமான பணிகளுடன் கீழ்காணும் ஆலோசனைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

  • இந்திய வானூர்தி நிலைய ஆணையம், சென்னை வானூர்தி ஓடுதளத்தின், கலிபோர்னியா தாங்கு விகித (CBR) மதிப்பை உயர்த்துவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது.
  • சிப்காட் தொழில்நுட்ப பூங்கா, தேர்வாய் கண்டிகை ஆகிய இடங்களில் ‘பெங்கில்மென் பீம் டிஃப்லெக்ஷன்’ (BBD) சோதனையின் மூலம் தார்சாலையின் மேல் அடுக்கின் தடிமன் வடிவமைக்கப்பட்டது.
  • ரைட்ஸ் - காமராஜ் துறைமுகத்துக்கு கருங்கல் துணை அடித்தளம் (GSB) மற்றும் ஈரக்கலவை அடித்தளம் (WMM) ஆகியவை வடிவமைக்கப்பட்டன.
  • சதீஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ - "ஸ்ரீஹரிகோட்டா - சூலூர்பேட்டை சாலை"யின் ஓடுதளம் நீரில் மூழ்குவதை தடுப்பதற்கும் மற்றும் சாலைப் புருவங்களின் மண் அரிப்பைக் கட்டுப்படுத்த பரிந்துரைகள்.

ஆராய்ச்சிப் பணிகள்:

4.1. நிறைவுற்ற ஆராய்ச்சி திட்டங்கள்:

தமிழ்நாடு அரசின் மாநில புத்தாக்க முன்முயற்சி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் முடிவுகள் கீழ்க்கண்டவாறு,

4.1.1. நிலக்கீல் கலவையில் நுண்ணிய களி மண்ணின் தாக்கம் குறித்த ஆய்வு

இந்த ஆய்வானது வழக்கமான நிலக்கீல் கலவையுடன் நுண்ணிய களிமண் வகைகளான பென்டோனைட் மற்றும் மான்ட்மொரில்லோனைட் ஆகியவற்றை சேர்க்கை பொருளாக தனித்தனியே சேர்த்து நிலக்கீல் கலவையின் இயந்திரப் பண்புகளை மேம்படுத்தவும், அதிக வாகன சுமையினால் சாலைகளில் ஓடுதளங்களில் நீள்வாக்கில் உருவாகும் பள்ளங்களை (rutting) குறைக்கவும், மற்றும் ஓடுதளங்களில் அயர்வு தன்மைகளை (Fatigue) கட்டுப்படுத்தி ஆயுளை மேம்படுத்தும் வகையிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

4.1.2 சணல் இழை வலுவூட்டப்பட்ட குளிர் நிலக்கீல் கலவைகளின் செயல்திறன் குறித்த ஆய்வு"

நெகிழும் சாலையானது சூடான நிலக்கீல் கலவையைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது, இது அதிக வெப்பநிலையில் (140 முதல் 175ºC வரை) அமைக்கப்படுகிறது, மேலும், சூடாக்குவதற்கு கணிசமான எரிபொருள் தேவைப்படுகிறது, இது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது. பசுமையான சாலைகளுக்கான முன்முயற்சியாக, குளிர் நிலக்கீல் கலவையை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஏனெனில் இதில் நிலக்கீலுக்கு பதிலாக நிலக்கீல் குழம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. IRC:SP:100-2014ஆனது குளிர் கலவை வடிவமைப்புக்கான குறைந்த மார்ஷல் நிலைத்தன்மை (Marshal stability) மதிப்புகளைக் குறிப்பிடுகிறது. எனவே, அதிக போக்குவரத்துக்கு ஏற்றவாறு சூடான கலவை வடிவமைப்பின் அளவிற்கு குளிர்ந்த நிலக்கீல் கலவையின் நிலைத்தன்மை மதிப்பை அதிகரிக்க குளிர்க்கலவைகளில் மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. அதன் அடிப்படையில் இயற்கையாகக் கிடைக்கும் சணல் நாரினை குளிர்ந்த நிலக்கீல் கலவையுடன் சேர்த்து கலவையின் மேம்பட்ட செயல்திறனை கண்டறிவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி முறையில், பொருள் தேர்வு, பொருள் வகைப்படுத்துதல், வேறுபட்ட சணல் நாரின் அளவு மற்றும் நீளம் ஆகியவற்றுடன் குளிர் நிலக்கீல் கலவையைத் தயாரித்தல், கலவை மாதிரிகளின் மீது மார்ஷல் சோதனை நடத்துதல், முடிவுகளை ஒப்பீடு செய்து நிலக்கீல் மற்றும் சணல் நாரின் சரியான அளவை கண்டறிதல் ஆகியவை அடங்கும். இந்த ஆய்விலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன.

HRS

பதிமான எதிர்ப்பு சோதனைக்குப்பின் மாதிரிகள்

  • சணல் நாரினால் வலுவூட்டப்பட்ட குளிர் நிலக்கீல் கலவை சிறந்த சாலை பதிமான எதிர்ப்பு (Rut Resistance) மற்றும் நிலைப்புத் தன்மையைக் (Stability Value) கொண்டுள்ளது.
  • இந்த கலவையை நெடுஞ்சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படலாம்..
  • இது முற்றிலும் மாசில்லாத சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையாகும். இந்த கலவையானது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவுகிறது.
  • குளிர்நிலக்கீல் கலவையை உபயோகிப்பது எளிதானது மற்றும் நச்சுத் தன்மையற்றது..
  • குளிர் நிலக்கீல் கலவை, குளிர் மிகுந்த மற்றும் ஈரப்பதமான இடங்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது.

4.1.3 உறுதி செய்யப்பட்ட துணைத் தளத்தின் (Sub Base) மீது அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் தன்மை குறித்த ஆய்வு

துணை அடித்தளம் மற்றும் துணைத்தளத்தை புதிய முறைகளை கையாண்டு நிலைப்படுத்துவதன் மூலம் குறைந்த செலவினம் கொண்ட சாலையினை வடிவமைத்தல்.
இதில் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில் கருங்கல் மற்றும் துணை அடித்தளத்துடன் ஜியோ -கிரிட் அமைத்து உருவாக்கப்பட்ட சாலையில் மண்ணின் மேற்பரப்பில் உண்டாகும் செங்குத்து அமுக்கு திரிபு மிகவும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது..

4.1.4 சாலை அடித்தளத்தின் தாங்குதிறனை கற்குடைவு துகள்களை (Quarry dust) சேர்த்து அதிகரிப்பது குறித்து கற்றறிதல்

கலிபோர்னியா தாங்கு விகிதம் (CBR) ஐந்துக்கு குறைவாக உள்ள மண்ணின் கலிபோர்னியா விகிதத்தை உயர்த்தும் முறை பற்றிய ஆய்வு.
சாலை அடித்தளத்தின் கலிபோர்னியா தாங்கு விகிதமானது அடித்தள மண்ணுடன் 50% அளவு கற்குடைவு துகள்களை சேர்ப்பதன் மூலம் 2,3,4 வில் இருந்து முறையே 11,12,14 ஆக அதிகரிப்பது கண்டறியப்பட்டது. மேலும் கட்டுமான செலவு முறையே 34%, 26%, 22% ஆகக் குறைந்தது.

4.1.5 நெடுஞ்சாலைத்துறையில் பாலத்தின் செயல்திறனை கருவிகள் மூலம் கண்காணித்தல்.

  • இந்த ஆய்வில், ஈக்காட்டுத்தாங்கல் அருகே உள்வட்ட சாலை கி.மீ. 2/4 ல் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் உணர்ந்தறியும் கருவிகள் மற்றும் தகவல் பெறும் அமைப்புடைய கருவிகள் மற்றும் அதன் துணைக் கருவிகளும் நிறுவப்பட்டு, பாலத்தின் செயல்திறன் கண்டறியப்பட்டது.
  • இம்முறையில் நாளுக்கு நாள் பாலத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.
HRS

4.1.6. கற்கலவை சாலைகளில் நீராற்றும் சேர்மங்களின் செயல்திறன் குறித்த ஆய்வு

  • இந்த ஆய்வின்படி, நீர் அடிப்படையிலான நீராற்றும் சேர்மங்களின் மூலம் கற்கலவை நீராற்றுதலை விட ரெசின் அடிப்படையிலான சேர்மங்களின் மூலம் கற்கலவை நீராற்றுதல் அதிக செயல்திறன் உடையதாக கண்டறியப்பட்டது.
  • கற்கலவையில் நீராற்றுதல் சிரமமாக உள்ள இடங்களில் நீராற்றும் சேர்மங்கள் பயன்படுத்தலாம்.
  • இதன் மூலம் அதிக படியான தண்ணீர் (ம) பணியாளர்களின் செலவு தவிர்க்கப்படுகிறது.
HRS

கற்கலவை பலகை வார்ப்பு மாதிரிகள்

HRS

நீராட்டும் சேர்மங்கள் பூசப்பட்ட கற்கலவை பலகை

4.1.7 எளிதில் விபத்திற்குள்ளாகும் சாலை பயனீட்டாளர்களுக்கான விபத்து பற்றிய ஆய்வு

இந்த ஆய்வு முக்கியமாக நகர்ப்புற சாலைகளில் எளிதில் விபத்திற்குள்ளாகும் சாலைப் பயனர்களுக்கு (VRUs) ஏற்படும் சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கான பொருத்தமான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க முன்மொழியப்பட்டது.
பாதிக்கப்படக் கூடிய சாலைப் பயனர்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையே ஏற்படும் மோதல்கள், அவற்றின் தீவிரம், பாதசாரிகளின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆய்விற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த ஆய்வுக்காக சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 18 இடங்கள் கண்டறியப்பட்டன. நடைபாதை, பாதசாரிகள் கடக்குமிடம், வாகன வேகம் போன்ற அளவுருக்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு இடத்திற்கான செயல்திறன் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு எளிதில் விபத்திற்குள்ளாகும் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பொருத்தமான தீர்வு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

HRS

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள பாதசாரி கடக்குமிடத்திற்கு அருகில் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து இயக்கம்

HRS

கோவை சிங்காநல்லூர் சந்திப்பில் நடை பாதை – வாகன இயக்கம்

4.2. நடைபெற்றுவரும் ஆராய்ச்சி திட்டங்கள்

4.2.1 வட்ட சோதனை தடத்தின் உதவியுடன் நீண்ட காலம் தாங்கக் கூடிய சாலைக் கட்டுமானத்திற்கான தொழில்நுட்பம் குறித்த ஆய்வு:

இந்த ஆய்வானது, விரிசல்களாலோ அல்லது சக்கர பதிமானத்தினாலோ சாலைக் கட்டமைப்பில் ஏற்படக் கூடிய சேதத்தைத் தவிர்த்து நீண்ட நாள் தாங்கக் கூடிய நெகிழும் சாலையின் வடிவமைப்பை வட்ட சோதனை தடத்தைக் கொண்டு கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட நாள் தாங்கக் கூடிய சாலைக்குரிய திரிபுகளை அடையும் வரை மாதிரி சோதனை தடத்தின் மேல் சுமையுடன் கூடிய கனரக வாகன சக்கரம் சுழலவிடப்படும். சுமையினால் வட்ட ஓடுதளத்தில் உள்ள நிலக்கீல் அடுக்கு மற்றும் துணைத்தள அடுக்கில் ஏற்படும் திரிபுகளை அளவிடும் பொருட்டு திரிபு உணரும் கருவிகள் பொருத்தப்பட்டு கணினி மூலம் திரிபுகள் பதியப்படும். நிகழ் நேர சாலைகளில், அதனுடைய வடிவமைக்கப்பட்ட காலம் வரை நிகழும் பளு அல்லது சுமையை, மாதிரி சோதனைத் தடத்தில் இந்த துரிதப்படுத்தப்பட்ட வட்ட சோதனை அமைப்பின் மூலம் உருவாக்கி சோதனை நடத்தப்படும். அந்த சாலைக்கான பொருத்தமான வடிவமைப்பைக் கண்டறிந்து, குறைந்த கால முறைப் பராமரிப்பு செலவைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வுகள் பரிந்துரைக்கப்படும்.

HRS HRS

நிலக்கீல் அடுக்கின் கீழ் மின்னணு திரிபு உணரும் கருவி பொருத்தப்பட்டுள்ள படம்

HRS

நிலக்கீல் அடுக்கு இடப்படுகிறது

5. இந்திய சாலைக் குழுமத்தின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் பங்களிப்பு

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் 11 ஆம் தேதி வரை லக்னோவில் (உத்தர பிரதேசம்) நடைபெற்ற இந்திய சாலை குழுமத்தின் 81 வது ஆண்டு அமர்வின் போது, சென்னை நெடுஞ்சாலைகள் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மூன்று தொழில்நுட்ப கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

5.1 “சணல் இழை வலுவூட்டப்பட்ட குளிர் நிலக்கீல் கலவைகளின் செயல்திறன் குறித்த ஆய்வு" – திரு. C.அய்யாதுரை உதவி இயக்குநர், நிலக்கீல் ஆய்வகம்

HRS

5.2 கற்கலவை சாலைகளில் நீராற்றும் சேர்மங்களின் செயல்திறன் குறித்த ஆய்வு" – திரு.மு.ஆனந்தராஜ், உதவிப் பொறியாளர்/ கற்கலவை ஆய்வகம்

HRS
HRS

5.3 வெவ்வேறு சேர்க்கைகளில் உறுதி செய்யப்பட்ட தளம் மற்றும் துணைத் தளத்தின் (Sub Base) மீது அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் செயல்திறன் குறித்த ஆய்வு” திருமதி. காத்யா உதவிப்பொறியாளர்/ மண் ஆய்வகம்

HRS
HRS

6. உறுப்பினர்:

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அவர்கள் கீழ்கண்ட இந்திய சாலை குழுமத்தில் உள்ள வாரியங்களின் உறுப்பினராக உள்ளார்.

  • புதிய கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அங்கீகரிக்கும் குழுமம்
  • மனிதவள மேம்பாட்டு குழுமம்
  • இணை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் அவர்கள் பின்வரும் BIS இன் குழுவின் முதன்மை உறுப்பினராக உள்ளார்.

  • PCD 06 – நிலக்கீல், தார் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பிரிவு குழுமம்.

7. ஈட்டப்பட்ட வருவாய்

2022-23 ஆம் நிதி ஆண்டில், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் அனைத்து ஆய்வகங்களின் மூலம் 23631 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.24.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

8. தரக்கட்டுப்பாடு:

கட்டுமானம் (ம) பராமரிப்பு பிரிவு, நபார்டு (ம) கிராமச் சாலைகள் மற்றும் பெருநகரம் ஆகிய அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பால கட்டுமானப் பணிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக ஒன்பது தரக்கட்டுப்பாட்டுக் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

II. பயிற்சி மையம்

துறையின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சாராத அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் அவர்களின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் பிரத்யேக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி மையத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன.

2020-21-ஆம் ஆண்டு கீழ்காணும் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன:

  • 250 இருக்கை வசதியுடன் கூடிய அதிநவீன கூட்ட அரங்கம்
  • 40 இருக்கை வசதிகள் கொண்ட நான்கு வகுப்பு அறைகள்
  • 25 இருக்கைகள் கொண்ட சிறு கருத்தரங்கம்
  • 25 பணி நிலையங்களைக் கொண்ட கணினி ஆய்வகம்
  • நூலகம்
  • 32 இரண்டு படுக்கை அறை மற்றும் 8 மூன்று படுக்கை அறை வசதி கொண்ட விடுதி
  • உடற்பயிற்சிக்கூடம், உள் மற்றும் வெளி விளையாட்டு வசதிகள்

விரிவான பயிற்சித் திட்டம்

5 ஆண்டுகளில் துறையின் அனைத்துப் பொறியாளர்களுக்கும் மற்றும் பிற அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில், விரிவான பயிற்சித் திட்டம் (CTP) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான அரசின் வழிகாட்டுதல்கள் அரசாணை (4டி) எண். 1, நெ (ம) சி.து (எச்.ஆர் 1) துறை, நாள். 18.03.2022-ல் வழங்கப்பட்டுள்ளன.

25.04.2022 அன்று விரிவான பயிற்சித் திட்டம், மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

CTP இன் படி நடத்தப்பட்ட பயிற்சிகள்


வ. எண்

பயிற்சித் திட்டம்

தொடக்கம்

முடிவு

பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை

1

நெகிழ்வு சாலைகள்

TFT -01

25.04. 2022

30.04.2022

39

2

23.05. 2022

28.05.2022

38

3

12.09. 2022

17.09.2022

40

4

தொழில்நுட்பம் சாராத அலுவலர்களுக்கான தகவல் தொடர்புத் திறன்

NPQ -01

18.05.2022

20.05.2022

27

5

பாலங்கள் மற்றும் தளப்பிரிப்பான்கள்

TFT - 02

09.05. 2022

14.05.2022

34

6

06.06. 2022

11.06.2022

36

7

20.02.2023

25.02.2023

36

8

தொழில்நுட்ப அலுவலர்களுக்கான தகவல் தொடர்புத் திறன்

TPQ -01

18.10. 2022

20.10.2022

41

9

சாலைப் பாதுகாப்பு பொறியியல்

TFT -03

09.05. 2022

13.05.2022

38

10

30.05. 2022

03.06.2022

35

11

20.06. 2022

24.06.2022

37

12

22.08. 2022

26.08.2022

43

13

26.09. 2022

30.09.2022

45

14

30.01.2023

03.02.2023

36

15

20.02.2023

24.02.2023

39

16

ஒப்பந்த மேலாண்மை மற்றும் முரண்பாடு தீர்வுகள்

TFT -04

19.12.2022

23.12.2022

40

17

இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கான அறிமுக மற்றும் அடித்தள பயிற்சி

தொகுதி I

06.02.2023

10.02.2023

39

18

தொகுதி II

06.02.2023

10.02.2023

39

19

தொகுதி III

27.02.2023

03.03.2023

39

20

தொகுதி IV

27.02.2023

03.03.2023

33

மொத்தம்

754


2022-23 ஆம் ஆண்டில், 577 பொறியாளர்களுக்கும் 27 தொழில் நுட்பம் சாராத அலுவலர்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2022-ல் நியமிக்கப்பட்ட 150 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கு அறிமுக மற்றும் அடித்தள பயிற்சி வழங்கப்பட்டது. அனைத்து பயிற்சிகளின் போதும், அதிகாலையில் யோகா மற்றும் தியான வகுப்புகள், சிறந்த யோகா ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

மேலும், 26 துணை ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலகத்தின் 110 பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பல்வேறு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நிறுவனத்தின் ஆய்வகங்களில் உள்வைப்பு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களின் கல்லூரி திட்டப்பணிகளில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடமி (IAHE) மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி (AASC) நடத்தும் பயிற்சிகளில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்துக் கொள்வதற்கான பரிந்துரைகளைப் பயிற்சி மையம் ஒருங்கிணைக்கிறது.


HRS
HRS
HRS
HRS
HRS
HRS
HRS
HRS
HRS
HRS
HRS

சாலை பாதுகாப்புப் பொறியியல் பயிற்சி (22.08.2022 to 26.08.2022))


HRS
HRS
HRS
HRS

III. சாலை பாதுகாப்பு அலகு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தவும், சாலை விபத்துகள் மற்றும் அவை தொடர்பான உயிரிழப்புகளைக் குறைக்கவும் பின்வரும் நோக்கங்களுடன் பிரத்யேக சாலைப் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கங்கள் பின்வருமாறு,

  • iRAD மற்றும் பிற இணை ஆதாரங்களில் இருந்து சாலைப் போக்குவரத்தின் விபத்துத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.
  • சாலைப் பாதுகாப்பு தொடர்புடைய பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகளையும் அரசு சாரா நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தல்.
  • சாலை சந்திப்பு மேம்பாட்டிற்கான பிரேரணைகள் மற்றும் பிற சாலைப் பாதுகாப்பு பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல்.
  • கள ஆய்வுகளை மேற்கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் பணி முன்னேற்றத்திற்குப் பிறகு உரிய ஆய்வு செய்தல்.

கோயம்புத்தூரில் முக்கியமான சந்திப்புகளில் சமிக்ஞைகள் நீக்கப்பட்டு ரவுண்டானாக்களை அமைப்பதன் மூலம் சாலைப் பயனாளர்களின் பயண நேரம் குறைக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு அலகு பொறியாளர்கள், சமிக்ஞை நேரத்தை தேவைக்கேற்ப மாற்றி, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைத்தல் ஆகியவற்றில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவுகிறார்கள். மேலும், பொறியாளர்கள் போக்குவரத்து சமிக்ஞை மற்றும் விதிகள் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கற்பித்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒருங்கிணைத்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CRIDP)-ன் கீழ் 2022-23 ஆம் ஆண்டில், 532 சாலைப் பாதுகாப்பு பணிகளுக்கு ரூ.191.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 22.08.2022 அன்று “சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான வழிகாட்டி”யை வெளியிட்டார். மேலும் மாநிலத்தின் சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து பங்குதாரர் துறைகளுடன் 03.01.2023 அன்று ஆய்வு செய்தார்.

HRS
HRS

மேலும், மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அவர்களால் நாமக்கல், செங்கல்பட்டு, ஊட்டி, தேனி, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கோவை மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில், பல்வேறு பங்குதாரர்கள் (stake holders), வாகன உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால், சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விபத்துக்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நாமக்கல் மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் - 10.11.2021


HRS

செங்கல்பட்டு மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 14.12.2021


HRS

ஊட்டி மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 21.12.2021


HRS

தேனி மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 18.05.2022


HRS

மதுரை மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 19.05.2022


HRS

தூத்துக்குடி மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 20.05.2022


HRS

சிவகங்கை மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 13.07.2022


HRS

ராமநாதபுரம் மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 14.07.2022


HRS

கோவை மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 30.11.2022


HRS

விருதுநகர் மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் 23.12.2022


HRS

இயக்குநருக்காக,

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்.

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004175842
Last Updated: 29-03-2024
Click to listen highlighted text! Powered By GSpeech